சென்னை: கரோனா தாக்கும் இடர் உள்ளதால் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது.
தெளிவற்ற அரசின் அறிக்கை
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல்செய்யப்பட்டிருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளில் பலவகையினர் இருப்பதாகவும், அவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படும் என எந்தத் தகவலும் இல்லை எனவும், அரசின் அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.
வீடுகளுக்கே சென்று தடுப்பூசி
மேலும், சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிக்கையில் கூறியுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு நபருக்குத் தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், அவர் இருக்கும் இடத்தை அடைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
அரசுக்கு அறிவுறுத்தல்
பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 3 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு