சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், இன்று (அக் 19) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ஆம் நாள் நிகழ்வு நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றைய கேள்வி நேரத்தின்போது, திருநெல்வேலி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “திருநெல்வேலியில் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அரசு ஆவண செய்யுமா? இதற்காக தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மழைக்காலங்களில் கால்நடைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் 7,560 சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 20 முகாம்கள் வீதம், 150 சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் கீழ்நத்தம் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்பட்டது.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி, என்னென்ன நோய்கள் எங்கெங்கே பரவுமோ அதற்கான தடுப்பூசிகளை போடுவதற்கான நடவடிக்கைகளை கால்நடைத்துறை எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: அரசு நிலங்களில் யார் வீடு கட்டி இருந்தாலும் அகற்றப்படுவார்கள் - துரைமுருகன்