சென்னை: இந்தியாவில் குரங்கம்மை நோய் இதுவரை கேரளாவில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி, “குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு வருபவர்களுக்கு முதலில் மூன்று நாட்கள் காய்ச்சல், உடல்வலி இருக்கும். அதனைத் தொடர்ந்து உடலில் கொப்புளம் உருவாகும். நெறிகட்டிகள் ஏற்படும். இதனால் பாதிப்பை கண்டறிய முடியும்.
குரங்கம்மை நோய் உள்ளங்கை, உள்ளங்கால் போன்றவற்றில் சிவப்பாக தெரியும். மேலும் கைகளில் சிறிய அளவில் கொப்புளங்கள் உருவாகும். அதில் இருந்து வரும் தண்ணீர் மூலம் வைரஸ் பரவி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் பரவும்.
எனவே அவர்கள் பயன்படுத்திய துணி உள்ளிட்ட பொருட்களை கொதிக்கும் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலும், அவர்கள் பேசும்போது வரும் எச்சில் திவளையால் பரவும் என்பதால், பாதுகாப்புடன் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
சின்னம்மை நோய் வந்த பின்னர் கொப்புளங்கள் காய்ந்தால், உடலில் தழும்புகள் தெரியாது. குரங்கம்மை வந்தால் உடலில் தழும்புகள் தெரியும். குரங்கம்மை நோயை ஆர்டிபிசிஆர் மூலம் பரிசோதனை செய்தும் தெரிந்து கொள்ளலாம். மரபணு மாற்றம் குறித்து ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை செய்தும் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சின்னம்மை, பெரியம்மை நோயைத் தடுப்பூசி செலுத்தி ஒழித்து விட்டோம். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த நோய் பரவி வருகிறது. குரங்கம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கான சிகிச்சை அளித்து தனிமைப்படுத்தினால், நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்தபோது, பயன்படுத்தியதுபோல் முழு பாதுகாப்பு உடை அணிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தற்பொழுது தடுப்பூசி வந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். இந்த நோய் வந்தால் மூன்று நாட்கள் முதல் 21 நாட்கள் வரையில் இருக்கும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து நுண்ணுயிரியல் வல்லுனர் விஜயலட்சுமி கூறுகையில், “குரங்கம்மை நோயை ஆர்டிபிசிஆர் எந்திரத்தை பயன்படுத்தி கண்டறிய முடியும். மேலும் நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம், கொப்புளத்தில் இருந்து வரும் நீர், உமிழ் நீர் ஆகியவற்றின் மூலம் கண்டறிய முடியும். மாநிலத்தில் உள்ள மரபணு மாற்று ஆய்வகத்தின் மூலம் நோய் தொற்றை உறுதி செய்யும் வசதியும் இருக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'பாலியல் உறவு மூலமாக குரங்கம்மை வைரஸ் பரவுதா?' - அலெர்ட் செய்த WHO!