சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து திரை துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய திரைத்துறையினர், கரோனா தொற்று காரணமாக திரைத்துறை மோசமான நிலையைச் சந்தித்து வருவதாகவும், துறை ஐசியூவில் உள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு திரைத்துறைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
திரைத்துறையினருக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றிலிருந்து மீள அதுவே சிறந்த வழி. கலைஞர் திரைத்துறையை சேர்ந்தவர், நானும் திரைத் துறையைச் சார்ந்தவன்தான். திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை முதலமைச்சர் நிச்சயம் செய்வார்" என்றார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இதுவரை தமிழ்நாட்டில் 1,01,63,960 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வர உள்ளது. வந்தவுடன் தொடர்ந்து செலுத்தப்படும். கரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலின். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கிராமம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே போல சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலை வரும். மற்றவர்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டால் அது அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். திரைத்துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அது பொது மக்களைச் சென்றடையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்." என்றார்.
இதையும் படிங்க: பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!