பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 34.46 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு, 31.72 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை மூன்று தவணைகளாக 1,727.14 கோடி ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் வலைதளத்தில் தகுதியான விவசாயிகள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் உழவன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழ்நாடு வேளாண்துறை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில், பயனாளி முன்பதிவு சேவையில் பிஎம் கிசான் திட்டத்தை தேர்வு செய்து, தகுதியான விவசாயிகள் தங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதனடிப்படையில், ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தால், விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்ளலாம்.
உழவன் செயலியை ஆண்டிராய்டு ஃபோன் மூலம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோனில் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.