சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி கிடங்கில் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், கரோனா தொற்றின் மூன்றாம் அலை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா மட்டுமல்லாமல் பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. "இந்தியாவில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 100ம், தமிழ்நாட்டில் மொத்தமாக 200-க்கும் மேல் தொற்று உறுதியாகும். கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் 100-க்கும் கீழ் குறைந்து இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து, இன்று 200-க்கும் மேல் பதிவாக உள்ளது", எனத் தெரிவித்த அவர் 'அதிலும் உருமாறிய
ஒமைக்ரான் வகை தொற்றான பிஏ4, பிஏ5 தமிழ்நாட்டில் பதிவாக தொடங்கியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் பிஏ4 வகை 7 பேருக்கும், பிஏ5 வகை தொற்று 11 பேருக்கும் உறுதியாகியுள்ளது. இவர்கள் லேசான தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது. இதற்காக, தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 1.2 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமலும், 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தாமலும் உள்ளனர். கரோனா தொற்றினை தடுக்க தடுப்பூசி செயல்பாடு மிக அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூலமாக புதிய வகை தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது' எனவும் சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.87% பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசி யை 83.6% பேரும் செலுத்தியுள்ளனர். இதுவரை 11.18 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையில் ராணிப்பேட்டை, மதுரை, நாமக்கல், தேனி மாவட்டங்கள் குறைவாக உள்ளது. "மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துகள் தயார் நிலையில் உள்ளது.
கரோனா தொற்று வந்ததும் சிகிச்சை பெறுவதை காட்டிலும் வராமல் தடுப்பது மிக முக்கியம். இதனால் மக்கள் அலட்சியமாக இருந்துவிட கூடாது. இதற்காக தடுப்பூசியை 12ஆம் தேதி நடைமெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயம் இல்லையென்றாலும், தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கடமை. சமூக பாதுகாப்பிற்காக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 10% பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். 12ஆம் தேதி காலை 7மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்" என தெரிவித்தார்.
''தமிழ்நாட்டில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 1077 பேர் இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர். அதில், 51 பேர் மருத்துவமனையிலும், 11 பேர் ஆக்சிஜன் சிகிச்சையிலும், 7 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மருத்துவமனைகளில் 1 விழுக்காட்டிற்கும்கீழ் தான் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உள்ளது'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''காஞ்சிபுரம் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 35 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு சனிக்கிழமை முதல் விடுதி மூடப்படும். வகுப்புகள் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். இதனால் மாணவ மாணவிகள் உடனே வெளியேற உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இது சுகாதாரத்துறையிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் அளித்த சுற்றறிக்கையில் உள்ள நடைமுறைகள் திரும்பப்பெற வேண்டும். மாணவர்களை வெளியேற்றக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில், 5ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படாமல் உள்ளது'' என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு