இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனாவிற்கு பிறகு ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “ரூ.20 லட்சம் கோடி மீட்புத் திட்டம்” என்று, வழக்கம்போல் சில முழக்கங்களையும் இணைத்து முன்வைத்தார். ஆனால், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள “செயல்திட்டம்”, பிரதமர் செய்த அறிவிப்பின்மீது பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது; இரண்டுக்கும் தொடர்பில்லாமல் நீண்ட இடைவெளி இருக்கிறது.
உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், அப்படித் தப்பித்தவறி திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், 5000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம்கூட இல்லை என்பது, ஏற்கனவே சூழ்ந்துள்ள சங்கடங்களுக்கிடையே சலிப்பை உருவாக்கி இருக்கிறது.
மேலும் மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் - மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் “கூட்டாட்சித் தத்துவத்தின்” கடமையையும் பொறுப்பையும் மத்திய அரசு நிறைவேற்ற இப்போதும்கூட எண்ணிப்பார்க்கவில்லை.
வேலையிழப்பும் - வருமான இழப்பும் ஒவ்வொரு குடும்பத்திலும் தாண்டவமாடும் இந்த நேரத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் நேரடியாக பணமாக வழங்கிடும் திட்டத்தை முதலில் அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.