சென்னை: மத்திய அரசின் திட்டங்களை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கியதால் மக்களின் வரிப்பணத்தில் மீதம் ஏற்பட்டுள்ளதுடன், உலக அளவில் இறால் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா நம்பர் ஒன் நாடாக விளங்குகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'மோடி@20 நனவாகும் கனவுகள்' (Modi@20 Dreams Come True) என்ற புத்தகத்தையும், அம்பேத்கர் & மோடி (Ambedkar & Modi) ஆகிய புத்தகங்களின் தமிழ் பதிப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்.12) வெளியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார்.
மோடி @20 நனவாகும் கனவுகள் என்ற புத்தகம் முதலமைச்சராகவும், பிரதமராகவும் நரேந்திர மோடி அவர்களின் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த பயண புத்தகத்தின் தமிழ் பதிப்பும், அம்பேத்கர் & மோடி இரு மகத்தான தலைவர்களின் வாழ்க்கையில் இருக்கும் அசாதாரணமான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டும் புத்தகத்தின் தமிழ் பதிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், 'மோடி@20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர் & மோடி ஆகிய இரண்டு புத்தகங்களையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். நாம் இந்த நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஒரு நல்ல தலைவரின் மாண்புகளை இவ்விரு புத்தகங்களில் இருந்து பெறமுடியும். 20 ஆண்டுகளுக்கு முன் உசிலம்பட்டியில் பெண் சிசு கொலை நடைமுறையில் இருந்தது.ஆனால் இன்று பெண்கள் சமூகத்தில் இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளனர்.
பெண்கள் வளர்ச்சியில் பிரதமர் செலுத்திய கவனம் குறித்தும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.நம் நாட்டின் பழைய கதைகள் எல்லாம் நாம் மறந்து இருந்தோம். அதை பிரதமர் மோடி நினைவுபடுத்தி விட்டார். 300-400 ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளாக அழைக்கப்பட்டனர். ஒரு வீரனின் பயணத்தில் நாம் எப்படி பயணிக்க முடியும் என்பது குறித்தும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது' என பேசினார்.
பின்னர் பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, 'அனைவருக்கும் சமமான கல்வி, உயர்கல்வியில் திறன் மேம்பாடு, சர்வதேச அளவிலான கல்வி போன்றவை குறித்து பல ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர் பேசினார். இன்று அதனை இந்திய பிரதமர் மோடி நனவாக்கி கொண்டிருக்கிறார்.
தேசிய கல்விக்கொள்கை 2020 (National Education Policy) மூலம் உலகதரம் வாய்ந்த கல்வியை வழங்கி வருகின்றனர். சென்னை ஐஐடியில் 20 கல்வி பணிக்குழு முதல் கருத்தரங்கு நடைபெற்றது பெருமைக்குரியது. உலக அளவில் கல்வித்தரம் குறித்து இந்தியாவில் விவாதித்து கொண்டிருக்கிறோம். 'ஆத்ம நிர்பர் திட்டம்' மூலம் இந்தியா வேகமாக வளர்ச்சி பெறுகிறது. சென்னை ஐஐடியில் படிக்க பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது' என பேசினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, 'இந்த இரண்டு புத்தகங்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழில் வெளியிட்டிருக்கிறோம். அம்பேத்கர் மிகச்சிறந்த பொருளியல் வல்லுனராக இருந்துள்ளார். நீர் மேலாண்மையில் அம்பேத்கரின் சிந்தனைகள் மகத்தானது. ஜல் சக்தி துறையின் கீழ் சுத்தமான சுகாதாரமான குடிநீரை குழாய் மூலமாக பிரதமர் வழங்கி உள்ளார்.
பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு இரவு நேரத்தையோ, விடியற்காலையையோ பார்த்து காத்திருப்பார்கள். தற்பொழுது கழிப்பறைகள் கட்டப்பட்டு பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பத்தில் இருந்த சிரமம் நீக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் முககவசம், பிபிகிட் தயார் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம். பெண்கள் பயன்படுத்தப்படும் நாப்கின் இல்லாமல் சிரமமப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தேவையான நாப்கின் தயார் செய்து குறைந்தவிலையில் அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் எல்லோருக்கும் நினைவுச் சின்னம் இருந்தது. அண்ணல் அம்பேத்கார் பிறந்த வீடு எங்கிருந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர் கடைசியாக வாழ்ந்த இடம் எது என்று யாருக்கும் தெரியாது. 2015 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் 125 ம் பிறந்தநாள் ஆண்டு கொண்டாடப்பட்டது. அம்பேத்கார் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஐந்து இடங்களை நமது பிரதமர் கண்டறிந்து அவற்றை புனித இடமாக மாற்றி உள்ளார். 11 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆத்ம நிர்பர் திட்டத்தின் கீழ், நாமக்கல், திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் இறால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை இந்தியாவில் கண்டுபிடித்து அனைத்து மக்களுக்கும் செலுத்தி, நோய் தொற்றில் இருந்து பிரதமர் மோடி காப்பாற்றி உள்ளார்.
80000 ஸ்டார்ட் அப் களை புதிதாக தொடங்கி, உலக அளவில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை புதிதாக தொடங்கிய நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நூற்றாண்டு சுதந்திர தினத்தை எதிர்நோக்கியுள்ளது. 2047 ஆண்டு இந்தியா வல்லரசு நாடாகவும் மிகவும் சக்தி வாய்ந்த நாடாகவும் மாற்ற இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த 25 ஆண்டு காலத்தில் பயணிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை" - பிரதமர் மோடி!