சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவின் மீது உள்துறை அமைச்சகம் சில கருத்துகளைக் கேட்டுள்ளது. அந்த கருத்துகள் மீது தமிழ்நாடு அரசு விளக்கம் தயார் செய்து சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன், நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், 'நீட் விலக்குப்பெறுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சில கருத்துகளைக் கேட்டுள்ளது. அதற்கான விளக்கங்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ளார். சட்டமசோதாக்களின் மீது இதுபோன்ற விளக்கங்களை கேட்பது என்பது வழக்கமானது தான்.
மத்திய அரசின் சட்டத்தின் மீது விலக்கு கேட்பதற்கு மாநில சட்டப்பேரவைக்கும், அரசிற்கும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச்சட்டம் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்மாறாக இருக்கிறது.
குடியரசுத்தலைவரின் அனுமதிக்கு அனுப்புவதற்கு முன்னர் மத்திய அரசின் துறைகள் சரிபார்த்து தான் அனுப்புவார்கள். ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக இருப்பதால் தான் மத்திய அரசிற்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசிற்கு எதிராக இருப்பதாலேயே நிராகரிப்பார்கள் எனக்கூற முடியாது' என்றார்.
அரசியலமைப்புச்சட்டத்தின் சிறப்பு: மேலும் 'அரசியலமைப்புச்சட்டம் 234 பிரிவு 2 இதற்கு வழி வகுக்கிறது. மத்திய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றிய பிறகு ஒரு மாநிலம் சட்டம் இயற்றி இருந்தால், அந்தச் சட்டம் ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தால், மாநில அரசு நிறைவேற்றிய சட்டம் அமலில் இருக்கும். மத்திய அரசின் சட்டம் செயல்படாது. இது தான் அரசியலமைப்புச்சட்டத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்’ என எம்.பி.வில்சன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து மாநில அரசினால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு விலக்குப் பெற்றதற்கான முன்னுதாரணம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்குப்பெறுவதற்கு 2006ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத்திற்கு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அதனால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெறுவதற்கு முன்னர், மத்திய அரசு தான் ஆய்வு செய்து அனுமதி அளித்தனர்’ எனவும் கூறினார்.
இந்தச் சட்டம் புதியதல்ல: 'அதே போல் இந்தியாவில் விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டம் அமலில் இருந்ததால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அப்பாேது 2017ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தப்பட்டதால், அந்தச் சட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு கேட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதுபோன்று மத்திய அரசிற்கு எதிராகச்சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்ட நிலுவையில் இருக்கிறது. எனவே, இந்தச் சட்டம் புதியதல்ல. நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெறுவதற்கான சட்டத்தின் மீது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் பதில்களை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிக்கும்’ எனவும் எம்.பி. வில்சன் தெரிவித்தார்.
இறையாண்மயை எப்படிப் பாதிக்கும்? மேலும் பேசிய எம்.பி. வில்சன், 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் சட்ட மசோதா இந்திய இறையாண்மயை எப்படிப்பாதிக்கும்? அரசியலமைப்புச்சட்டத்தின் விதிகளின்படி நடந்துகொண்டால் இந்திய இறையாண்மையை பாதிக்கும் என எப்படி கூறமுடியும்? அரசியல் அமைப்புச்சட்டத்தை அவர்கள் படித்தார்களா? அரசியலமைப்புச்சட்டம் 234 பிரிவு 2ஐ தயவு செய்து படித்தால், அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். மத்திய அரசில் உள்ள அலுவலர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை திரித்து சொல்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது' என்றார்.
10 ஆண்டுகளாகப் பாதிப்பு என யாரும் கூறவில்லை: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை பொறுத்தமட்டில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் பிற மாநிலத்திற்கும் செல்வார்கள். எனவே, மருத்துவப்படிப்பில் இளநிலையில் 15 விழுக்காடும் முதுகலைப்படிப்பில் 50 விழுக்காடிலும் மாற்றம் செய்யமுடியாது. மாநிலத்தில் உள்ள இளநிலைப்படிப்பில் 85 விழுக்காடு இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்குப்பெறும் சட்டம் பொருந்தும்.
சிபிஎஸ்இ மாணவர்களையும் எந்தவிதத்திலும் பாதிக்காது. பொது நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தபோதும் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிப்பு என யாரும் கூறவில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் எந்தவிதமான புகாரும் இல்லை. அதே முறையைத்தான் மீண்டும் செயல்படுத்த உள்ளனர்’ எனக் கூறினார்.
நீட் தேர்வு மசோதாவுக்கு விலக்கு வேண்டும்: 'மேலும் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்டமசோதாவின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டத்தை அவரே கையில் எடுத்துக்கொண்டு, சட்டமசோதாவைத் திருப்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான சிறப்பு சட்டமசோதா இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீட் தேர்வில் விலக்குப் பெறுவதற்கான சட்டமசோதா மீது காலம் தாழ்த்தியதால் நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கட்டமைப்புகளை கருத்தில் கொண்டும், சிறப்பு மருத்துவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களுக்குச்சேவை அளிப்பதற்கான மருத்துவர்கள் தேவையின் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகளை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும்.
பொது சுகாதாரம் அரசியலமைப்புச்சட்டத்தின்படி மாநிலப் பட்டியலில் வருகிறது. பொது சுகாதாரம் அளிக்க வேண்டியது மாநிலத்தின் கடமை எனக் கூறும்போது, அதனை மட்டும் வைத்துவிட்டு அனுப்பக்கூடாது. மாநில அரசின் பட்டியலில் இருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றியதால் தான் இது போன்ற பிரச்னைகள் வந்துள்ளன.
மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது: உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், மாநில அரசின் தேர்வுத்துறையின் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் எனக் கூறியுள்ளனர். எனவே, அதன் அடிப்படையில் நீட் தேர்வின் மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சேர்க்கை என்பதை மாற்ற வேண்டும்.
நீட் தேர்வில் குற்றவியல் நடவடிக்கை வழக்குகளும், சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருக்கும், ஒரே பாடத்திட்டம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பிய அவர், 'ஒன்றிய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான மசோதாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என எம்.பி. வில்சன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "நாட்டின் துடிப்பான ஜனநாயகத்திற்கு தலை வணங்குகிறேன்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை!