சென்னை: சரகர் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவக் கல்வியை ஒன்றிய அரசு இந்துத்துவமயமாக்க முயல்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவக் கல்வி காவி மயமாகி வருகிறது: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
”ஒன்றிய பாஜக - ஆர்.எஸ்.எஸ் அரசு மருத்துவக் கல்வியை "காவி மயமாக்கி" வருகிறது. இந்துத்துவாமயமாக்கி வருகிறது. மருத்துவக்கல்வியில் இந்துத்துவா, பார்ப்பனிய சித்தாந்தத்தைத் திணிக்கிறது.
மதச்சார்பற்ற நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறது. நவீன அறிவியல் மருத்துவம் என்பது எந்த ஒரு நாட்டுக்கோ, எந்த ஒரு பண்பாட்டுகோ, எந்த ஒரு மக்கள் பிரிவினருக்கோ சொந்தமானது அல்ல. இன்றைய நவீன அறிவியல் மருத்துவம் என்பது ஒரு உலகளாவிய மருத்துவமாகும். சர்வதேச மருத்துவமாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய பண்டைய சமூகங்களின், பண்டைய மருத்துவ முறைகள் அனைத்தும் நவீன அறிவியல் மருத்துவம் வளர்வதற்கு அடித்தளமாக உதவியுள்ளன. பண்டைய மருத்துவ முறைகளில் உள்ள ஏற்கத்தக்க அறிவியல் ரீதியான விஷயங்களை ஏற்று, அவற்றை வளர்த்தெடுத்து நவீன மருத்துவம் பரிணமித்துள்ளது.
திரிக்கப்பட்ட உறுதிமொழி: ஆனால், ஒன்றிய அரசு, மருத்துவத்தை இந்துத்துவா அடையாள அரசியலுக்கு , மதவெறி அரசியலுக்கு, சமஸ்கிருதத் திணிப்பிற்கு பயன்படுத்த முனைகின்றது. நவீன அறிவியல் மருத்துவம் என்பது ஒரு மதச்சார்பற்ற மருத்துவமாகும். பண்டைய இந்திய மருத்துவரான சரகரின் , திரிக்கப்பட்ட உறுதிமொழியை மதச்சார்பற்ற நவீன அறிவியல் மருத்துவம் பயிலும் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டுமென மாநில அரசுகளை, மருத்துவச் சங்கங்களை கலந்து பேசாமல் தேசிய மருத்துவ ஆணையம் ஏதேச்சதிகாரமாக முடிவு செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
உண்மையில் பண்டைய இந்திய மருத்துவர்களின் சித்தாந்தமானது, பண்டைய இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தத்திற்கு எதிரானதாக, இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நோய்க்கு காரணம்," ஒருவர் முற்பிறப்பில் செய்த பாவம்", என்ற பார்ப்பனியத்தின் கருத்து மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டது.
நோய்கள் உருவாக குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. அவற்றை மருந்துகள் கொண்டு குணப்படுத்த முடியும். மனிதன் இயற்கையின் விளைவு, இயற்கையின் சிகரம். எனவே, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் மருந்துகளாக பயன்படுத்த முடியும். இத்தகைய கருத்துகள், சரக சக்ஹிதையிலும், சுஷ்ருத சம்ஹிதையிலும் இடம் பெற்றுள்ளன. பசு இறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சரக சம்ஹிதை கூறுகிறது.
ஆயுர்வேதாவை அடக்குமுறை செய்த பார்ப்பனியம்: எனவே, அன்றைய பார்ப்பனியம் அன்றைய மருத்துவர்களுக்கும் , ஆயுர்வேத மருத்துவ முறைக்கும் எதிராக அடக்குமுறைகளை ஏவியது. மருத்துவத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள அதர்வண வேதத்தைக்கூட, ஒரு வேதமாக , நீண்ட காலத்திற்கு அன்றைய பார்ப்பனியம் ஏற்கவில்லை.
இந்தியாவின் மருத்துவமுறை மற்றும் ஆயுர்வேதாவின் வளர்ச்சியை தடுத்த பார்ப்பனியம் , சரக சம்ஹிதையிலும் "பசுவை புனிதமாக்குதல்" போன்ற கருத்துகளை இடைச் செருகல் செய்தன. ஆயுர்வேதாவின் வளர்ச்சியைத் தடுத்த பார்ப்பனியம், அதே ஆயுர்வேதாவை இந்து மருத்துவ முறையாக மாற்ற முயல்கின்றது.
அத்தைகைய நோக்குடன் , பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்தியல் அடங்கிய "சரக சம்ஹிதையை" தொகுத்ததாகக் கூறப்படும் சரகரை ,மஹரிஷியாக மாற்றிவிட்டன. அவரது உறுதிமொழி என்ற பெயரில் பிராமணர்களையும், பசுவையும் உயர்வானதாக்கும், புனிதமாக்கும் கருத்தியலையும், ஆன்மிகத்தையும், வர்ணாஸ்ரம முறையையும், சமஸ்கிருதத்தையும், மருத்துவ மாணவர்களின் சிந்தனைகளில் திணிக்க முயல்கின்றன. 'இது ஒட்டு மொத்த மருத்துவக் கல்வியையும் இந்துத்துவா மயமாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகும்.
சரகர் உறுதிமொழியை திரும்பப் பெற வேண்டும்: மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மதச்சார்பற்ற செயல்பாட்டை சீர்குலைப்பதாகும். உறுதி மொழி என்ற பெயரில் , "இந்துத்துவா" கருத்தியலை, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் போக்கை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். சரகர் உறுதிமொழியை திரும்பப் பெற வேண்டும். சரகர் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற , ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மருத்துவத்தில் ஆன்மிகத்தைப் புகுத்தும் ஹிப்போகிரெட்டிக் உறுதிமொழியையும் கைவிட வேண்டும்.
உலக மருத்துவர்கள் சங்கத்தால் 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் உறுதிமொழியை இந்தியாவிலும் ஏற்பதே இன்றைய நிலைக்கு உகந்ததாக இருக்கும். இந்த உறுதிமொழியை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக ஏற்க வேண்டும். இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி போன்ற சில கல்லூரிகளில் சரகர் உறுதிமொழியை ஏற்கச்செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
சரகர் உறுதி மொழியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவக் கல்வியை ஒன்றிய அரசு இந்துத்துவாமயமாக்க முயல்வதை கைவிட வேண்டும் " எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Vignesh Lockup death : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் விசாரணை!