சென்னை: இந்தியாவில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணங்களை உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 24 சுங்கச்சாவடிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என தேசிய நெடுஞ்சாலை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையைப் பொறுத்தமட்டில் வானகரம், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தபோதிலும்; இந்த இரண்டு சுங்கச்சாவடிகளும் இன்னும் அகற்றப்படவில்லை. எனினும், இந்த இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதிகபட்சம் ரூ.295 வரை உயர்வு: கார், ஜீப், வேன் மற்றும் இலகு ரக வாகனங்கள் ஒரு முறை செல்ல இதுவரை ரூ.30 கட்டணம் இருந்தது. அது குறைந்தபட்சமாக ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.45இல் இருந்து ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இலகு ரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவை ஒரு முறை செல்ல ரூ.45 ஆக இருந்த கட்டணம் ரூ.55 ஆக உயர்த்தப்பட உள்ளது. திரும்பி வருவதற்கு ரூ.70 ஆக இருந்த கட்டணம் ரூ.90 ஆக உயருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் டிரக்குகள் ஒருமுறை செல்ல ரூ.95 ஆக இருந்த கட்டணம் ரூ.125 ஆக உயர்கிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.145இல் இருந்து ரூ.190ஆக உயர்கிறது. கனரக கட்டுமான இயந்திரங்கள், மண் நகரும் உபகரணங்கள், 3 முதல் 6 அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.150ஆக இருந்த கட்டணம் ரூ.195ஆக உயர்த்தப்படுகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.230இல் இருந்து ரூ.295ஆக அதிகரிக்கிறது.
இதனிடையே இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு மக்களின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும் எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை