சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையொட்டியும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கிற கொள்கையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை மாணவர்கள் அறிந்திட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், மாணவர்கள் அறிந்துகொள்ளக்கூடிய இந்தியாவின் 100 முக்கிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சுற்றுலாத் தலங்களுக்கு அனுப்பிடவேண்டும். அதற்கு முன்னதாக இணையவழியில் மாணவர்கள் இந்த குறிப்பிட்ட இடங்களை அறிந்திட உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரம், மாமல்லபுரம், குற்றாலம், ஏற்காடு, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய 6 சுற்றுலாத்தலங்கள் இடம் பிடித்துள்ளன. இதன்மூலம் அந்த சுற்றுலாத்தலங்களின் வரலாறு அவற்றின் முக்கியத்துவம், அங்குள்ள இலக்கிய சிறப்புகள், பாரம்பரியம் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்திட உதவும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்... டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிகள் அறிமுகம்!