சென்னை: இந்தியாவில் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்புகள் பெற்றாலும் அதற்கும் சம உரிமை வழங்கப்படும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
மேலும் விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் வழியில் இளங்கலை, முதுநிலை படிப்புகளில் சேர புதிய விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளன.
இந்தியாவில் தற்பொழுது பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுவருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி 900 கல்லூரிகளில் நாடு முழுவதும் புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவுசெய்துள்ளது.
தன்னாட்சிக் கல்லூரிக்கும் ஆன்லைன் கல்வி அனுமதி
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 விழுக்காடாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்குப் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சியும், முதுநிலைப் படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன் அனுமதியைப் பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் தேசிய தர அங்கீகாரத்திற்கான (NAAC) தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறுவாக்குப்பதிவு - பள்ளிகளுக்கு விடுமுறை!