சென்னை: அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021, மே 7 ஆம் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
33 அமைச்சர்கள் உட்பட முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று 18 மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த மார்ச் 29 ஆம் தேதி அமைச்சரவையில் இலக்கா மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டு அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக சிவசங்கர் நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவையை வலுப்படுத்த அதனை மாற்றி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக தலைவரின் நிலையை அறிந்து நாங்கள் அவரிடம் பேச வேண்டும் என்றார்.
எங்களுடைய ஆசைகள் எல்லாம் அவர் மீது திணிக்க முடியாது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு தகுதியானவர் என தெரிவித்தார். மேலும், அந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம் எனவும் இது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைச்சரவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அவருக்கு இலாகா வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவின் தலையெழுத்து.. காங்கிரஸின் கடைசி வாய்ப்பு.. வெல்லப்போவது யார்?