சென்னை காசிமேடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சுற்றி திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது இவர் கடந்த ஒரே வாரத்தில் வடசென்னையில் ஆறு இடங்களில் கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த ரவுடி மதன் என்கிற லொட்டை மதன் என்பது தெரியவந்தது.
அதன்பின்னர் இவரை கைது செய்து விசாரணை செய்தபோது கடந்த எட்டாம் தேதி பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒரு நபரை கத்தியால் தாக்கி, மிரட்டி ஐந்தாயிரம் ரூபாய் பறித்துள்ளார். மேலும் லொட்டை மதன், அவரது கூட்டாளி ஹிட்டா விஜய் ஆகியோர் இணைந்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரியும் உளவு பிரிவு காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அதே நாளில் செம்பியம் பகுதியில் மெடிக்கல் கடை பூட்டை உடைத்து 70 ஆயிரம் திருடியுள்ளனர்.
இதே போல் ஒரு வாரத்தில் ஆறு இடங்களில் ஒரு லட்சம் ரூபாய்வரை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர் கொள்ளையடிக்க பயன்படுத்திய முன்று இருசக்கர வாகனங்களையும், 20ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் லொட்டை மதன் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கூட்டாளி ஹிட்டா விஜயையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து மூன்று கத்திகள்,பெட்ரோல் வெடிகுண்டு, மூன்று செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது இயற்கை....