சென்னை : சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள பல இடங்களில் ஏராளமான தொழிற்சாலை மற்றும் குடோன்கள் இயங்கி வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைவான சம்பளத்திற்கு வேலை ஆட்கள் வேண்டும் என்றால் வடமாநிலத்தவர்தான் என்ற நிலை உறுவாகி இருக்கும் நிலையில், அவர்களின் வறுமை மற்றும் கல்வியின்மையை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில் குறைந்த சம்பளத்திற்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் ஏராளமான வடமாநிலத்தோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மற்றும் அதனையொட்டிய பல பகுதிகளில் வடமாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் பலர் குழந்தை தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் அவர்களை பணிக்கு அமர்த்தப்பட்டு கொடுமை படுத்துவதாகவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இது குறித்து ஆய்வு திட்டமிட்ட ஆட்சியர் உடனடியாக குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகளை அழைத்து சம்பவம் குறித்து ஆய்வு செய்ய அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் சென்னை அடுத்த பூக்கடை மண்ணடி மீரா லப்பை தெரு மற்றும் முக்கர் நல்லமுத்து தெரு உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, அங்குள்ள மண்ணடியை சேர்ந்த அப்துல் மாஜித் என்பவருக்கு சொந்தமான பேக் (Bag) குடோன்களில் சுமார் 29 குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி சரியாக பணிபுரியாத சில குழந்தை தொழிலாளர்களை சிகரெட்டால் சூடு வைத்தும், தாக்கியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த குழந்தைகளை மீட்ட அதிகாரிகள் அவர்களை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அந்த 29 குழந்தைகளும் பீகார் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், ஏழு கிணறு பகுதியை சேர்ந்த முகமது சாகித் உள்ளிட்ட பலர் வட மாநிலங்களில் இருந்து அதிக சம்பளம் தருவதாக கூறி குழந்தைகளை அழைத்து வந்ததும், சம்பளம் தராமல் நாள் ஒன்றுக்கு சுமார் 18 மணி நேரத்திற்கு மேல் அவர்களை வேலை வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தலைமறைவாக இருந்த முகமது சாகித் மற்றும் அப்துல் மாஜித் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்ட குழந்தைகள் விசாரணைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்..! நடுரோட்டில் போதை ஆசாமி ரகளை