சென்னை நொளம்பூர் வாவின் ரோடு மங்கலேரி பகுதியில் நேற்றிரவு மூன்று நபர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறியதால் மூவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவர் சேர்ந்து உடனிருந்த நபரை கல்லால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், இன்று அதிகாலை 3 மணியளவில் கொலை செய்த உடலை ஒரமாக வைத்து எரிக்கும்போது அங்கு வந்த டீ வியாபாரம் செய்யும் தர்மராஜ் என்பவர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக அவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர் டீ வியாபாரம் செய்பவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் போதையிலிருந்த இருவரும் மண்ணூர்பேட்டை சாலை வழியாக சென்றதாக தெரிவித்தார். உடனே ரோந்து வாகனத்தில் சென்று இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், இருவரையும் நொளம்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் விஷ்ணு (33), பாஸ்கர் (44) எனத் தெரியவந்தது. இருவரும் நொளம்பூர் பகுதியில் குப்பை சேகரிப்பவர்கல் எனபதும் தெரியவந்தது.
மேலும், இவர்களுடன் மது அருந்திய நபரும் குப்பை சேகரிக்கும் நபர் என்றும் அவர் பெயர் தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குடிபோதையில் தகராறு செய்ததால் அடித்துக் கொன்று விட்டு காவல் துறையினருக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை எரித்து விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே பாதுகாப்பு போலீஸ் வீட்டில் கொள்ளை - சிப்காட் போலீசார் விசாரணை