சென்னை : கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிசிஐடி காவல்துறையினர் மூன்று போக்சோ வழக்கினை சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், இம்மூன்று போக்சோ வழக்குகள் தொடர்பான விசாரணையையும் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூன்று போக்சோ வழக்குகளில் முதல் வழக்கு சம்மந்தமான 300 பக்க குற்றப்பத்திரிகையையும் சிபிசிஐடி காவல்துறையினர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு போக்சோ வழக்கிற்கு உண்டான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் பணியில் சிபிசிஐடி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இரண்டு வழக்குகள் பதிவு
இதற்கிடையே சிவசங்கர் பாபா தான் ஆண்மையற்றவர் என்ற மருத்துவ சான்றிதழைக் காட்டி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை, வெளிநாட்டில் வாழும் அவரின் வாரிசுகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ உள்பட இரண்டு பாலியல் வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். சுஷில் ஹரியின் முன்னாள் மாணவி ஒருவருக்கும், முன்னாள் மாணவியின் தாயிற்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவைக் கைது செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புக - அண்ணாமலை