சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்தவர்கள் விஜய் (எ) மொட்டை விஜய் (21) மற்றும் விஸ்வா (எ) விஸ்வநாதன்(23) இருவரும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் ஆவர். இருவர் மீதும் தலா 1 கொலை வழக்கு மற்றும் 1 கொலை முயற்சி வழக்கு என 2 குற்ற வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் விஜய் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவரும் கடந்த மே 19ஆம் தேதி அன்று துணை ஆணையாளர், மயிலாப்பூர் காவல் மாவட்டம் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தாங்கள் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டோம் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.
ஆனால் விஜய், விஸ்வா ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று இரவு ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஹரி என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆகவே, குற்றவாளிகளான விஜய் மற்றும் விஸ்வா ஆகிய இருவரும் 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர், திஷாமிட்டல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவருக்கும் பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 275 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை அடைக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்பேரில், விஜய் மற்றும் விஸ்வா ஆகியோர் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...காவல் உதவி ஆய்வாளர் கைது