சென்னை பல்லவன் சாலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.எம் நகரில் 50க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அகற்ற முற்பட்டுள்ளனர்.
அப்போது, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29), பாலு (28) ஆகிய இருவரும் வீடுகளை அகற்றக்கூடாது என்றும், இந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது எனவும் கூறியபடி அப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆற்றில் விழுந்த இருவரையும் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின், இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து விரைந்து வந்த காவல் துரையினர் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மணிகண்டன் தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் முன்பு மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளைக் காலி செய்யக் கூறியதால் கூவம் ஆற்றில் இருவர் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெருந்துறை சிப்காட் வளாகத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை