சென்னையில் புதுப்பேட்டை, எழம்பூர், திருவல்லிகேணி ஆகிய பகுதிகளில் உள்ள காவலர் குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்படும் விலைஉயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி மாயமாகின.
விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ திருடிச் சென்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடங்களிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் இரவு நேரங்களில் இருவர் குடியிருப்புக்குள்ளே நுழைந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த சைக்கிள்களைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
அதனடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், இது தொடர்பாக புதுப்பேட்டையைச் சேர்ந்த கதிர்(33), காஜா மொய்தீன்(38) ஆகிய இருவரை எழும்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், விலை உயர்ந்த சைக்கிளை மட்டுமே இவர்கள் குறிவைத்துத் திருடிவந்துள்ளனர்.
அவற்றை மது வாங்குவதற்காக ரூ.500 ,ரூ.1000-க்கும் குறைந்த விலையில் விற்று வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 9 விலை உயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மீது ஆயிரம் விளக்கு, எழும்பூர் காவல் நிலையத்தில் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.