விசாகபட்டினம் பகுதியிலிருந்து சென்னை வழியாக பெங்களூருவிற்கு கஞ்சா கடத்தி செல்வதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரியாஸ் தலைமையிலான போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் மாதவரம் ரவுண்டானாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் மடக்கி சோதனை செய்தனர். அதில் 160 கிலோ கஞ்சா கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட கார் ஓட்டுநரான வேலூரை சேர்ந்த செல்வம் (40), கிருஷ்ணகிரியை சேர்ந்த ரங்கநாதன் (49) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி சென்னை வழியாக பெங்களூருக்கு சப்ளை செய்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து பல முறை கஞ்சாவை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பெங்களூரில் யாரிடம் கஞ்சாவை விற்கிறார்கள் என்பது குறித்து இருவரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.