சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை செல்லக்கூடிய சாலையில் தனியாருக்கு சொந்தமான பழைய லக்ஷ்மி & கோ கம்பெனி குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கால் இந்த குடோன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான இந்த குடோனில் தினசரி சிலர் வந்து செல்வதுமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சந்தேகமடைந்து சங்கர் நகர் ஆய்வாளர் பர்க்கத்துல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் பர்க்கத்துல்லா, துணை ஆய்வாளர் செல்வமணி இருவரும் விரைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு இரண்டு பேர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து எட்டு லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின் சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்விசாரணையில் இருவரும் திர்நீர்மலை சிவராஜ் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (வயது 40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலையின் நண்பனான விஜயராஜ் (வயது 35) எனத் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து இந்தக் குடோனில் கள்ளச்சாராயம் காய்ச்சி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும், குடோன் பழமையானது என்பதால் சாராயம் வாங்க வருபவர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊரடங்கை கழித்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது