சென்னை அரக்கோணம் - ரேனிகுண்டா வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ., ஆக அதிகரிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள 19 லெவல் கிராஸிங்கை (level crossing) நீக்கி, அதற்குப் பதிலாக சுரங்கப் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்காக சுமார் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேப்பங்குண்டா - புத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே நந்திமங்கலம் கிராமத்துடன் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லெவல் கிராஸிங் பகுதியில் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
![tunnel work](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-chennai-arakkonam-renigunda-train-7208446_17082021173831_1708f_1629202111_765.jpg)
ரயில் தண்டவாளத்தில்கீழ் தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தூண்கள் அகற்றப்பட்டு, கான்கிரீட் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. ராட்சத கிரேன்கள் உதவியுடன் 60 நிமிடங்களுக்குள்ளாகவே இந்தப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, டிராக் லிங்கிங் மற்றும் இருப்புப்பாதை பேனல்கள் பொருத்தும்பணி முடிக்கப்பட்டது. பெரும் சவாலான இந்தக் கட்டுமானப் பணிகள் முழுவதும் வெறும் ஐந்து மணி நேரத்தில் முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதன்மூலம் ரயில்களை சரியான நேரத்தில் இயக்குவதோடு மட்டுமல்லாமல், தடையில்லா சாலைப் போக்குவரத்திற்கும் வழிவகை செய்வதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் சிறுவர்கள் போல் அட்டகாசம்