இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"ஆதி மனிதன் தமிழன் தான், அவன் மொழிந்தது செந்தமிழ் தான்" என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல, உலகிலேயே தொன்மையும் இலக்கிய இலக்கண வளங்களும் நிறைந்த தமிழ்மொழியைப் பேசும் மூத்த குடிமக்களான தமிழ் பெருமக்கள் சித்திரை முதல் நாளில் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு எல்லா வளங்களையும் நலன்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்.
தமிழர் வாழ்வியல் எப்போதும் சித்திரை என்றாலே தெய்வீக மணம் பரப்பும் நிகழ்ச்சிகளும் திருவிழாக்களுமாக மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். இந்த முறை உலக அளவில் மனிதகுலம் எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடியினால் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு புத்தாண்டை வரவேற்போம். இதுவும் கடந்து போகும் என்கிற நம்பிக்கையுடன் அனைவரும் ஆரோக்கியத்துடனும் அத்தனை வளங்களுடன் மீண்டெழு வேண்டுமென வழிபடுவோம்.
கலாசாரம், பண்பாடு, உணவு என எல்லாவற்றிலும் இயற்கையோடு இணைந்த நம்முடைய பழந்தமிழர் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க, இழந்த துயர் மிகுந்த நாள்களைப் பயன்படுத்திக்கொள்வோம். தனிமனித விலகலைல் கடைப்பிடித்து விலகியிருந்தாலும் உள்ளங்களால் அனைவரும் ஒன்றுபட்டு நின்று கரோனா என்னும் பெருந்தொற்று நோயை வென்று காட்டுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.