கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலரின் ஆசையை பயன்படுத்தி ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தனர். மதுவுக்குப் பதிலாக ஆல்கஹால் கலந்த நச்சுப் பொருள்களை உட்கொண்டு, மதுப்பிரியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்துக் கொண்டணர். இன்னும் சிலர் மது அருந்த இயலாத விரக்தியில் தற்கொலையும் செய்து கொண்டனர்.
இச்சூழலில் மூன்றாவது கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறக்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது அருந்துவதைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டிலும் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு மது பிரியர்களிடையே துள்ளலை ஏற்படுத்தியிருந்தாலும், நீண்ட காலமாக மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வரும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தன்னுடைய கண்டனத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்லும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசின் இம்முடிவு மிக மோசமானது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பொறுப்பற்ற நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மதுவிலக்கு விவகாரம்: அரசின் கொள்கை முடிவு என்ன?