தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது.
அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கடம்பூர் ராஜுவிடம் ஏறக்குறைய 5 ஆயிரம் வாக்கில் தோல்வியடைந்துள்ளார். இதனால் டிடிவி தினகரனின் எதிர்கால அரசியல் பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.
2016ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அதிமுகவில் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டது. பிறகு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அதிமுக கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார்.
ஜெயலலிதா ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வெற்றி பெற்றார். எனினும், தினகரனுக்கும், அதிமுக அமைச்சர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவியது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக அதிமுகவுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நிறைவேறாததால் அமமுக தேமுதிகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது.
இந்த தேர்தலில் தினகரன் அதிமுகவிற்கு சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்மறையாக அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. கட்சியின் வாக்கு விழுக்காடும் அதிகரிக்கவில்லை.
இதனிடையே அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவும் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை.
இதையும் படிங்க: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!