சென்னை: குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வாட்ஸ் ஆப் குழுவில் வந்த குறிப்பை பயன்படுத்தி கணவனே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் பொக்லைன் எந்திரம் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுகன்யா(32) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், 3ஆவது முறையாக கர்ப்பமாக இருந்த சுகன்யாவுக்கு 10 மாதம் ஆன நிலையில், நவ.17ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மனைவிக்கு பிரசவ வலி வந்த போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்து மனோகரனே பிரசவம் பார்த்ததாகவும், இதுகுறித்த தகவலை அவர் வைத்திருந்த வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த தகவல் வைரலானதை அடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி மரணம்: காரணம் சிக்கன் பிரைடு ரைசா? கூடைப்பந்தா?
அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனோகரன் செல்போனை வாங்கிப் பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் "வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்" என்ற தலைப்பில் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைத்து, அந்த குழுவிற்கு மனோகரன் குழு உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. மொத்தம் 1,024 உறுப்பினர்களைக் கொண்ட அந்த குழுவில், வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டதும், அந்த தகவல்களைக் கொண்டு மனோகரன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும், சேயும் நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கணவனே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்