சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறோம். இடைத்தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதையும் தாண்டி எங்களுக்கு மக்கள் ஒரு வாய்ப்பை தருவார்கள்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.எம். சிவபிரசாந்த் ஒரு இளைஞர். ஒரு சில கட்சிகளை ஆதரவுக்காக சந்திக்க இருக்கிறோம். 2 பேரும் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) சின்னம் வேண்டும் என்றால், இரட்டை இலை சின்னம் கிடைக்காது. 2017ஆம் ஆண்டு இது போன்ற நிலையில் சின்னம் முடக்கப்பட்டது. இடைத்தேர்தலில் உறுதியாக வெல்வோம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய வாக்குகளை குறைத்து கொள்வார். இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே சாக்கடை என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இப்போது அந்த சாக்கடையில் இளங்கோவன் இறங்கியுள்ளார். வெல்ல முடியாத வேட்பாளர் அல்ல, இளங்கோவன். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் தோல்வி அடைந்திருக்கிறார்.
திமுக கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அமைச்சர்களின் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்" என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த், "தலைவர் மீதும், தொண்டர்கள் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றோம்.
நான் ஒரு கிரிகெட் வீரர். எதிரணியினரின் பந்து வீச்சுக்கு பயந்து, நான் களத்தில் இறங்க முடியாது. என் மீதும், தலைவர், தொண்டர்கள் மீதும் நம்பிக்கை வைத்துதான் போட்டியிட முடியும். டிடிவி தினகரன் கூறியதுபோல பெயரில் மட்டும்தான் ரோடு இருக்கிறது. ஈரோட்டில் எங்கும் ரோடு இல்லை. குறிப்பாக மாநகராட்சி வேலைகள் எதுவும் அங்கு நடைபெறவில்லை. கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்" என கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்;திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்