திமுக முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கும் விதமாக ' எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 35ஆயிரம் நபர்கள் உறுப்பினராகியுள்ளனர் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாகியுள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி திமுக உறுப்பினர் அட்டை பெற்றதுபோல் அவர் புகைப்படத்துடன் உறுப்பினர் அட்டை உலா வந்தது. இதை அழகிரி தரப்பினர் மறுத்தனர். தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் போன்றவர்கள் திமுகவில் உறுப்பினர் அட்டை பெற்றுள்ளது போல் உறுப்பினர் அட்டைகள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது.
இதை பற்றி திமுகவிடம் விசாரித்த போது, எளிமையாக ஒருவர் உறுப்பினராக வேண்டும் என்று வசதிகளை செய்யப்பட்டுள்ளது. அதை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இது சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஒரு லட்சம் உறுப்பினர்கள் என்று திமுக பரப்புரை செய்து வரும் நிலையில், இது போன்ற போலி உறுப்பினர் அட்டை உறுப்பினர் எண்ணிக்கையின் நம்பிக்கை தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க...#couplechallenge-ஐ புறக்கணிக்க வேண்டும்: தடயவியல் நிபுணர் கருத்து