கடந்த 10 நாள்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒலெக்ஷி (oleksi) (32) என்பவர் சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார். இந்நிலையில், சுற்றுலாவை முடித்து விட்டு சென்னையிலிருந்து கொழும்பு செல்வதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தார்.
அவர் அதிகளவில் மது அருந்தி வந்ததால் விமானத்திற்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், விமான நிலையத்திற்கு வெளியே இரவு முழுதும் இருக்கையில் அமர்ந்து உறங்கியுள்ளார். இன்று மாலை போதை தெளிந்தபின் ஸ்பைஸ்ஜெட் கவுன்ட்டருக்குச் சென்ற ஒலெக்ஷி, விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எனக் கூச்சலிட்டுள்ளார்.
'நீங்கள் நேற்றிரவே பயணம் செய்திருக்க வேண்டும், உங்களுடைய பயண நேரம் முடிந்துவிட்டது' என ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஒலெக்ஷி, கையில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து ஸ்பைஸ்ஜெட் கவுன்ட்டர் கண்ணாடியை உடைத்துள்ளார். இதனால், அங்கிருந்த ஊழியர்கள், பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த சி.எஸ்.எஃப். காவல் துறையினர் ஒலெக்ஷியை மடக்கிப்பிடித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்துவந்த விமான நிலைய காவல் துறையினர், அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள்