தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், எட்டு மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்தும் சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை பல்லவன் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தகுந்த இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களை அரசு இலவசமாக சொந்த ஊர் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்ட விதிகளை பின்பற்றாமல் இருக்க அனுமதி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராகவும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு வருவதற்கு எதிராகவும், ஊதியத்தை உயர்த்தாமல் எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவதை எதிர்த்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைந்த அளவிலான பணியாளர்கள், தகுந்த இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தும், கையில் கிருமி நாசினிகள் வைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்