தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ள நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ”தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசின் தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலரும் இடம்பெற்றுள்ளார்.
தலைமைச் செயலர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் அலுவல் சார்ந்த ஆய்வுக் கூட்டங்களைத் தவிர்த்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த விவரங்களை அவ்வப்பொழுது தலைமைச் செயலருக்கும், முதலமைச்சருக்கும் வழங்கப் பணிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மார்ச் 20ஆம் தேதியன்று நடைபெறவிருந்த 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்குபெற இயலாத நிலை உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்தக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாகையில் கரோனா வைரஸ் சிறப்பு வார்டு