அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதில் கடந்த 2015ஆம் ஆண்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி இந்த வழக்குத் தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரின் வீடு உள்பட மதுரை, கரூர், ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில், குற்றப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
குறிப்பாக சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் கணேசனின் வீட்டில் சுமார் 7 மணி நேரம் சோதனையும், விசாரணையும் நடத்தினர். இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக முன்னாள் அதிகாரிகள் மூன்று பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்தூறையினர் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பிவுள்ளனர்.
அதன் படி சென்னை போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குனர் ஆல்பர்ட் தினகரன், முன்னாள் இணை இயக்குனர் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அலுவலர் டேனியல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும்டெக்ஸ்டைல் நிறுவனம் உள்பட 17 இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு