சென்னை: சென்னையில் மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் சந்திப்பு வரையில் உள்ள வேளச்சேரி பிரதான சாலை மற்றும் செம்மொழி சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வேளச்சேரி பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இன்று(ஜூலை 2) முதல் ஒரு வார காலத்திற்கு, சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம் மற்றும் மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும், மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் சந்திப்பில் யு-டர்ன் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம், மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் சந்திப்பில் யு-டர்ன் செய்து, மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாம்பாக்கம் சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து நேரடியாக வாகனங்கள் தாம்பரம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 2ஆம் கட்ட பணிகள்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 119 கிலோமீட்டர் தொலைவுக்குப் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சிறுசேரி ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் பணி நிறைவின்போது வழித்தடம் 3, 4 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Whatsapp Metro Ticket: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!