சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகள் என அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளன.
இந்தநிலையில், மழை நீர் தேங்கியுள்ள சில சுரங்கப்பாதைகள் வழியே போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளன. இதில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும், அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ள ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேரும் சகதியுமாக உள்ளதால் இருசக்கர வாகனங்கள் செல்வதற்குத்தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால், சுரங்கப்பாதையில் உள்ளே போக்குவரத்து செல்லாமல், மேம்பாலத்தின் மேல் வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகரப்பேருந்து போக்குவரத்து மாற்றம்: அனைத்து உள்வரும் மாநகரப்பேருந்துகளும் பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம், பெரம்பூர் பாலம் வழியாகச்செல்கிறது.
வெளிச்செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில், ஓட்டேரி, ஜமாலியா வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் மழையின் காரணமாக அபிராமிபுரம் மூன்றாவது தெருவில் மரம் விழுந்துவிடுவதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு...