சென்னை: திமுகவில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ஜுலை 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று (ஜூலை 14) ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சைதாப்பேட்டை 17 ஆவது பெருநகர நீதிமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுகவின் சொத்துப் பட்டியலை வெளியிட்டதால் ஆளும் கட்சியில் பல பேருக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுகவின் முதலமைச்சரை விட பல்வேறு தரப்பினர் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கின்றனர். இன்று டி.ஆர்.பாலு தொடுத்த அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்தேன்.
பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்குச் சென்று இருக்கிறது. குறிப்பாக நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறது. டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணத்தில் பல பொய்களை கூறியுள்ளார். அவர் 2004 முதல் 2009 வரை ஊழல் அதிகமாக செய்ததால் தான் அன்றைய அமைச்சர் அவையில் இடம்பெறவில்லை என்று 2014 மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அழகிரி கூறியுள்ளார். டி.ஆர்.பாலு எவ்வாறு ஊழல் செய்தார், எத்தனை கப்பல் வைத்துள்ளார், அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்று எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறியுள்ளார்.
அதற்கு டி.ஆர்.பாலு, அழகிரி மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் தொடரவில்லை. இது 2008-ல் தனியார் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி. அப்போது பெட்ரோலியத் துறை மத்திய அமைச்சரிடம் கிங்ஸ் கெமிக்கல் நிறுவனத்திற்கு ஜெயில் நிறுவனத்தின் மூலம் கேஸ் கேட்டதாகவும் தனது பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனை நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஒப்புக்கொண்டதாகவும் அதனையும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்போதைய அதிமுக எம்.பி. மைத்ரேயன் கேள்விக்கு டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.
அவருடைய சத்தியப் பிரமாணத்தில் மூன்று நிறுவனத்தில் தான் பங்குதாரராக உள்ளதாகவும் மீதி எந்த நிறுவனத்திலும் பங்குதாரர் இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார். டி.ஆர்.பாலு மகள், மருமகன் உள்ளிட்டோர் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறோம். இது எவ்வாறு வந்துள்ளது என்று கேள்வி எழுப்பி இருக்கிறோம். இதையெல்லாம் இந்த சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிடாமல் நீதிமன்றத்தை ஏமாற்றி இருக்கிறார். நான் வெளியிட்ட திமுகவின் சொத்துப் பட்டியல் குறித்து அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் அளிப்பேன்.
பாஜக வழக்கறிஞர்கள் அணியின் பலம் தற்போது தான் எனக்குத் தெரிகிறது. இந்த வழக்கானது ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்பொழுது ஆஜராக சொன்னாலும் ஆஜர் ஆகி விளக்கம் தருவேன். நள்ளிரவில் நெஞ்சு வலி வருவதெல்லாம் எங்கள் கட்சியினருக்கு வராது. நடைபயணத்தில் ஒரு நாளை ஒத்தி வைத்துவிட்டு, இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். அடுத்த கட்டமாக திமுக ஊழல் பட்டியல் சம்மந்தமான பாகம் இரண்டு தயாராக உள்ளது. இதில், 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் உள்ளன.
பினாமியின் பெயர்களை பொது வெளியில் சொல்வது குறித்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். பினாமி பெயரில் வாங்கி இருக்கக் கூடிய பட்டியலில் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் சிபிஐ வரக்கூடாது என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. இரண்டாம் ஊழல் பட்டியல் குறித்து ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிப்பேன்.
திமுக சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் பாதயாத்திரைக்கு முன்பு, ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும். நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் திமுகவினருக்கு சொந்தமானவர்கள் தான். ரத்த சொந்தமும் இருக்கிறார்கள். இது சம்பந்தமான சில புகைப்படங்களும் உள்ளன. வெளியிடக்கூடிய இரண்டாம் பட்டியலில் புதிய அமைச்சர்களின் பெயரும் இடம்பெறும்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: எருமை கிடாக்களை பலியிட்ட பக்தர்கள் - திண்டுக்கல் அருகே நடைபெற்ற விநோத திருவிழா