இங்கிலாந்தில் உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு வந்த 2ஆயிரத்து 300 பயணிகளில் 2ஆயிரத்து 146 பயணிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் பிரிட்டனிலிருந்து வந்த 24 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 20 நபர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உருமாறிய தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய புனேவிலுள்ள தேசிய நுண்கிருமி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்று பேருக்கு உருமாறிய கரோனா உறுதி:
இது குறித்து, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இங்கிலாந்து நாட்டில் மரபியல் ரீதியாக பரிசோதனை செய்ததில் இதுவரை ஏற்கனவே அறிவித்த ஒரு நபரை தவிர மேலும் மூன்று நபர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள மரபணு உருமாறிய (UK Variant) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை தேசிய நுண்கிருமி ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (ஜன.04) மாலை தெரிவித்துள்ளது.
தொடர் கண்காணிப்பில் நோயாளிகள்:
மேலும், எட்டு நபர்களுக்கு மரபணு சோதனை செய்ததில் உருமாறிய கரோனா தொற்று இல்லை என உறுதி செய்த தகவல் பெறப்பட்டுள்ளது. இதுவரை, 44 நபர்களின் மரபணு சோதனை மாதிரி அனுப்பியதில் 12 நபர்களின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
மீதமுள்ள 32 நபர்களின் மாதிரிகளின் முடிவு வர வேண்டியுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தனி பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உருமாறிய கரோனா அச்சம்: பிரிட்டனிலிருந்து பிகாருக்குத் திரும்பிய 77 பேர் மாயம்!