செல்வராகவனின் இன்றைய தத்துவம்: இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநராக அறியப்படுபவர். இவரது படங்கள் வித்தியாசமான திரைமொழியை கொண்டிருக்கும். இயக்கம் தாண்டி தற்போது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். பகாசூரன், சாணிக் காயிதம், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் எதாவது கருத்து பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “எதை சொல்ல வந்தாலும் இதை சொல்லலாமா என சில நொடிகள் யோசித்து விட்டு சொல்லுங்கள். 90 சதவீதம் பிரச்சனைகள் அதிலேயே ஓய்ந்து விடும்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பதிலுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிம்புதேவன் - யோகிபாபு படத்தின் தலைப்பு வெளியானது: வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் இயக்குநர் சிம்புதேவன். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 302-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம், புலி, கசட தபற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது யோகிபாபுவை வைத்து சரித்திர படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு போட் (Boat) என்று பெயரிடப்பட்டுள்ளது. நெய்தல் கதை என கூறப்படும் இது முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் குஷி படப்பிடிப்பு நிறைவு: ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கண்ணிவெடி: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றுமின்றி மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கணேஷ்ராஜ் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு கண்ணிவெடி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரக்ஷன், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜப்பானில் சாதனை படைத்த ராம் சரணின் ரங்கஸ்தலம்: சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா நடித்து கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ரங்கஸ்தலம். இப்படம் ஜப்பானில் வெளியிடப்பட்டு அங்கேயும் சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று 70 ஸ்கிரீன்களில் ரிலீஸான இப்படம் முதல் நாளிலேயே 2.5 மில்லியன் யென் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த இந்தியன் திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.
இதையும் படிங்க: Leo Update: லியோ படப்பிடிப்பு நிறைவு - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி ட்வீட்!