கரோனா வைரஸ் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 40 அரசு, 23 தனியார் ஆய்வகங்களின் மூலம் 12 ஆயிரத்து 448 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இன்று 688 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் மூலம் 601 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் 7,466 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும், 4,775 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும், இன்று ஒரே நாளில் 489 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை 4,895 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இன்று மூன்று பேர் உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 64 வயது முதியவர், 72 வயது முதியவர், 82 வயது முதியவர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு:
சென்னை -7,672
திருவள்ளூர் -571
செங்கல்பட்டு -560
கடலூர் -420
அரியலூர் -355
விழுப்புரம் -312
திருநெல்வேலி -226
காஞ்சிபுரம் -208
மதுரை -163
திருவண்ணாமலை -155
கோயம்புத்தூர் -146
பெரம்பலூர் -139
திண்டுக்கல் -126
திருப்பூர் -112
கள்ளக்குறிச்சி -111
தேனி -89
தூத்துக்குடி -91
ராணிப்பேட்டை -84
நாமக்கல் -76
கரூர் -79
தஞ்சாவூர் -75
ஈரோடு -70
தென்காசி -72
திருச்சிராப்பள்ளி -68
விருதுநகர் -55
நாகப்பட்டினம் -51
சேலம் -49
கன்னியாகுமரி -49
ராமநாதபுரம் -39
வேலூர் -34
திருவாரூர் -32
திருப்பத்தூர் -29
சிவகங்கை -26
கிருஷ்ணகிரி -20
நீலகிரி -13
புதுக்கோட்டை -7
தருமபுரி -5
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வந்து தங்க வைக்கப்பட்டிருந்த 54 பேருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் வந்த இரண்டு பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில்களில் வந்த 2,661 நபர்களில் 713 பேருக்கு 16ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்னும் ஆய்வில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வந்தவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தும் மையங்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 747 பேருக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட 934 முதியவர்களுக்கும் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற நோய்கள் இருந்தால் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை உயர்மட்ட குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து துறைகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் இருந்தும் அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை தொடர்ந்து இழக்க நேரிடுவது பொதுமக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நோய்த் தொற்று தீவிரமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நோயின் தாக்கம் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இல்லாமல், நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட எதிரில் இருப்பவர்களுக்கு எளிதில் தொற்று பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.