அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார். இது பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்க, அதிமுக தலைமைக்குள் இருந்த பிரச்சனை காரணமாகவே மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் அனல் பறக்கும் கருத்து ஒன்றை வெளியிட்டார். இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் அக்கட்சித் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவருகிறது.
உட்கட்சி பூசல், மக்களவைத் தேர்தல் தோல்வி என அதிமுக துவண்டிருக்கும் சூழலில் இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.