2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய பலர், தேர்ச்சி பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தனர். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்திய போது, விடைத்தாள்களில் திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குரூப் - 4 தேர்வு மட்டுமல்லாமல் குரூப் - 2A தேர்வு மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு ஆகியவற்றில் மோசடி நடந்து இருப்பதும், ஒரு கும்பல் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் பலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 2016ஆம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அத்தியூர் கிராம நிர்வாக அலுவலரான அமல்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அமல்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.