தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர், துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 69 காலி பணியிடங்களுக்கு (ஜனவரி 20ஆம் தேதி)இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரரூப் 1 பணியில் அடங்கிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடத்தப்படும். குரூப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், துணை காவல்துறை கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் 10 பணியிடங்கள், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் 14 பணியிடங்கள், உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி 7 பணியிடங்கள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஒரு பணியிடம் உள்ளிட்டவை இந்த ஆண்டிற்கான அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: