குரூப்-4 பணியில் அடங்கிய இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், நில அளவையாளர், வரைவாளர் ஆகிய பணிகளில் 9 ஆயிரத்து 882 நபர்களை நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் கலந்தாய்வும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பணிகளில் அடங்கிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை நவம்பர் மாதம் வெளியிட்டது.
அப்போது, ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர் எனப் புகார் எழுந்தது. இதனை விசாரணை செய்த டிஎன்பிஎஸ்சி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தகுதிநீக்கம் செய்தது. இதன்பின்பு புதிய தேர்வர்களுக்கான பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்நிலையில் காலியாகவுள்ள குரூப்-4 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும், தேர்வர்கள் துறைகளைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளன.
கலந்தாய்வு வருகின்ற மார்ச் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கலந்தாய்விற்கு 11 ஆயிரத்து 138 தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசின் அலட்சியத்தால் சிறுமிக்கு விபத்து - நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை!