சென்னை: இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பேசியபோது, "தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு ஊதிய விகித்தாசரம் 4 (pay band 4) அரசுப் பணியை 12 ஆண்டுகள் நிறைவு செய்தவுடன் வழங்க வேண்டும். காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட4 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராடி வந்தனர்.
அதிமுக அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது. கடந்த 25.10.2019 முதல் 31.10.2019 வரை பல கட்டமாக தீவிர போராட்டங்களை மருத்துவர்கள் நடத்தினர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உண்ணாநிலை போராட்டமும், வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலினின் உறுதி
உண்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல்நிலை பாதித்த மருத்துவர்களை அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உண்ணாவிரதம் இருந்து வந்த மருத்துவர்களையும் சந்தித்து உறுதியளித்தார்.
அதிமுக அரசு, போராட்டத்தில் பங்கேற்றதற்காக 118 மருத்துவர்களை பணியிட மாறுதல் செய்து பழிவாங்கியது. இந்த இடமாறுதல்களை கண்டித்ததோடு, உடனடியாக இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு மருத்துவர்கள் நன்றியை தெரிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் மருத்துவர்கள் இருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினரை அழைத்துப் பேசாமல்,18. 6. 2021 அன்று திடீரென அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணை மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மருத்துவர்களை சோர்வடையச் செய்யும் அரசாணை
அந்த அரசாணையில், காலமுறை ஊதியம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. வெறும் படிகள் (allowances) மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. அந்தப் படிகளும் பல்வேறு துறை மருத்துவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒரே துறையை, உதாரணத்திற்கு, மருத்துவக் கல்வித்துறையைச் சேர்ந்த மேற்படிப்பு படித்து முடித்துள்ள சிறப்பு மருத்துவர்களிடையே கூட பாரபட்சத்தை காட்டும் வகையில் அரசாணை உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிகின்ற மருத்துவர்களை முற்றிலும் புறக்கணிக்கிற வகையிலும் அரசாணை அமைந்துள்ளது. இதன் காரணமாக, அரசு மருத்துவர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியும், விரக்தியும் உண்டாகியுள்ளது. கரோனா பணியால் மிகவும் சோர்வடைந்து காணப்படும் அரசு மருத்துவர்களை மேலும் சோர்வடையச் செய்யும் வகையில் இந்த அரசாணை உள்ளது.
எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். போராடிய, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினரையும் இதர அரசு மருத்துவச் சங்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'மருத்துவர் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுங்க' - மருத்துவர்கள் சங்கம்