சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் சிலவற்றை பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மின் விநியோகப் பிரிவில் ஏற்படும் பழுதுகளைச் சரி செய்வதற்கான ஹெல்பர், ஒயர்மேன் பணிகளை தனியார் நிறுவனத்தின் பணியாளர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் படித்த இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலை இல்லை என்ற நிலை படிப்படியாக உருவாக்கப்படும். இந்த மின்வாரிய முடிவுகளை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில், 18க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலோசனைக்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழ்நாடு மின்சார வாரியம் 63 ஆண்டுகளாக சிறப்பாக பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மின்சார வாரியத்தில் உள்ள துணை மின் நிலையங்களை இரண்டு ஆண்டுகளுக்கு தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடுவது என்பது சரியான நடவடிக்கை அல்ல.
மேலும், துணை மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டால் அனுபவம் இல்லாத சிலரால் அதனை சரிசெய்ய முடியாது. அதுமட்டுமின்றி மின்சார பழுது பார்க்கும் போது விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் மின்சார வாரியத்தின் உப கோட்டப் பிரிவுகளில் 50 விழுக்காட்டிற்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களில் 20 பணியாளர்கள் வீதம் தனியார் நிறுவனத்தின் மூலம் நியமனம் செய்ய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையே 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தச் சட்டத்தின்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்சார வாரியம் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ரூ. 412 என்ற அளவில் ஊழியர்களுக்கு தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டு தனியாருக்கு அளிக்கிறது.
இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரியும் நிலை ஏற்படும். ஏற்கனவே, மின்சார வாரியத்தில் மின் கட்டணம் தனியார் நிறுவனத்தின் மென்பொருள் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்த வில்லை என்பதற்காக கடவுச்சொல்லை(password) மாற்றம் செய்தனர். இதனால் மின் வாரியத்தில் ஒருநாள் கட்டணம் வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே, ஒப்பந்த பணியாளர்களாக பணி புரிந்தவர்கள் கேங்மேன் பணிக்கு தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ளனர். கேங்மேன் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாராக உள்ளது. மின்சார வாரியத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யாமல் தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்களை பணியில் அமர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, உள்ள தொழிற்சங்கங்களுடன் மேலும் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய பின்னர் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த முடிவை அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாகவும் அறிவிக்கப்படலாம். பணியாளர்கள் தேர்வு செய்வதில் மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய ஒப்பந்தத்தை மீறியதால் தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். மின்சார வாரியம் எங்களுடன் பேச்சு நடத்தி அதனை சரி செய்யலாம். மின் தொழிலாளியின் உயிரிழப்புக்கு முதல்முறையாக மின்சார வாரியம் விலையை நிர்ணயம் செய்துள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணைய குழு