சென்னை : கூட்டணி இடப்பங்கீட்டில் கேட்கும் இடங்களை அதிமுக ஒதுக்காதப்பட்சத்தில், தனித்துப் போட்டியிடலாமா? என்பது குறித்தும் மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், இன்று (ஜன.28) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
குறித்து மாவட்ட தலைவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார்.
முகாமிட்ட பாஜக தலைவர்கள்
இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் P. சுதாகர் ரெட்டி தமிழ்நாடு பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சி.பி. ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தனித்துப் போட்டி?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக செல்வாக்கான இடங்களில் தனித்து நிற்கலாம் என்று மாவட்ட தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை மாவட்டங்களில் கேட்கும் இடங்கள் ஒதுக்காத பட்சத்தில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இன்று மாலை அதிமுக- பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க : UP Polls 2022: உத்தரப் பிரதேச வேட்பாளர்களின் குற்றப் பின்னணி!