அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் இளமாறன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கத்தோடு அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. அதே வேளையில் முன்பருவக் கல்வி கற்கபோகும் மூன்று வயது குழந்தைகளின் மனநிலையினை அறிந்து உளவியல் ரீதியாக அணுகிட மாண்டிசோரி பயிற்சிப்பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளார்கள் என்பதற்காக பணிமாற்றம் செய்வது எவ்விதத்தில் சரியாக அமையும்.
உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பால் மாண்டிசோரி பயிற்சி முடித்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏமாற்றமளிக்கும். குழந்தைகளை மையப்படுத்தும் கல்வி முறையாக அமைந்திடவும் குழந்தைகளின் மன நலனை கருத்தில்கொண்டு இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் திட்டத்தினை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.