சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தாமல், தேர்தல் நடத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (அக். 28) தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள் ஆறு மாதங்களில் நிவர்த்தி செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவு துறை தரப்பில் உறுதி தெரிவிக்கபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், தற்போது வாக்காளர் பட்டியலில் குறைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நடத்த முனைப்பு காட்டப்பட்டு வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு, தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாக்காளர் பட்டியலை சட்டத்திற்கு உட்பட்டு திருத்தியப் பிறகு, சரியான வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என்றும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்து இறந்தவர்களின் பெயர்களை ஒரு மாதத்தில் நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, "சட்ட விதிகளின்படி, தற்காலிக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் ஆட்சேபங்கள் பெற்ற பின் அதனை பரிசீலினை செய்தப் பிறகு இறுதி வாக்களர் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் பின்னர் தற்காலிக பட்டியலில் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அனைத்து ஆட்சேபங்களும் பரிசீலனை செய்த பிறகே இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அரசுத் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பின் இந்த விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "மாலத்தீவோ.. இலங்கையோ மீனவர்களுடன் கலந்து பேசி மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்" - கனிமொழி எம்.பி!