சென்னை: அரசுப் பள்ளிகளில் 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (அக்.25) வெளியிட்டுள்ளது. மேலும், அரசாணை 149-ன் படி எழுத்துத்தேர்வு மூலமான போட்டித் தேர்வு மதிப்பெண் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட புள்ளி விவரப்படி, '13 ஆயிரத்து 500 பணியிடங்கள் காலியாக இருப்பதாக' தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களில் தற்போது தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் நிரந்தர அடிப்படையில், முழு நேர ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியர் படிப்பிற்கு படித்த பட்டதாரிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது.
இதற்கிடையே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பிறகு மற்றொரு போட்டித் தேர்வை எழுதுவதற்கு வழிவகை செய்யக்கூடிய அரசாணை 149-ஐ ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பட்டதாரிகள் வலியுறுத்தி வந்தனர். திமுக தேர்தல் அறிக்கையிலும், அரசாணை 149 ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை முன்வைத்து சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற்றது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப்பெற்றவர்களின் கோரிக்கையை ஏற்று, பணி நியமனத்திற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டது.
மேலும், போட்டித் தேர்வினை எழுதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிப்பெற்றவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு பள்ளிகளில் 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதில், 'நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். போட்டி எழுத்துத் தேர்வு ஒஎம்ஆர் ஷீட் (OMR Answer Sheet) மூலம் கொள்குறி முறையில் 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும். இது குறித்த விபரங்கள் http://www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்பட்டு, மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும். பள்ளிக்கல்வித்துறை அரசாணையின் படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிப்பெற்றவர்களுக்கு, தகுதிப்பெற்ற ஆண்டில் இருந்து ஒரு ஆண்டுடிற்கு 0.5 (பூஜ்ஜியம் புள்ளி ஐந்து) மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 பட்டதாரி பணிக்கு தகுதி 2012 ஆம் ஆண்டில் பெற்றிருந்தால், 2023 ஆம் ஆண்டு வரையில் 11 ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5.5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 பட்டதாரி பணிக்கு தகுதி 2013ஆம் ஆண்டில் பெற்றிருந்தால், 2023ஆம் ஆண்டு வரையில் 10ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 -ல் தகுதிப்பெற்றவர்களுக்கு 2012-ல் வெயிட்டேஜ் மதிப்பெண்களாக 5.5ம், 2013-ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2014-ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4.5 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2017-ல் தகுதிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2019-ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2022-ல் தகுதிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 0.5 (பூஜ்ஜியம் புள்ளி ஐந்து) மதிப்பெண்களும், 2023-ல் தகுதிப்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?